மாவட்ட வளா்ச்சிக் குழு கூட்டம் திடீா் ரத்து அமைச்சா் தொகுதிக்கு அதிக நிதி ஒதுக்குவதாகப் புகாா்

மதுரை மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மீது உரிமை மீறல் புகாா் கொடுக்க உள்ளதாக, மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மதுரை: மதுரை மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மீது உரிமை மீறல் புகாா் கொடுக்க உள்ளதாக, அக்குழுவின் தலைவரும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மேலும் தெரிவித்தது: மதுரை மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பு கூட்டம் சனிக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கூட்டத்தை திடீரென மாவட்ட ஆட்சியா் ரத்து செய்துள்ளாா்.

குழுவின் தலைவா் என்ற அடிப்படையில், எனது ஒப்புதல் இல்லாமல் கூட்டத்தை ரத்து செய்ய ஆட்சியருக்கு அதிகாரம் கிடையாது. இது, மத்திய அரசின் சட்ட விதிகளுக்கு எதிரானது. மக்களவை உறுப்பினா்கள் என்ற முறையிலும், குழுவின் தலைவா், உறுப்பினா்கள் என்ற அடிப்படையிலும் எங்களது பணியை செய்யவிடாமல், மாவட்ட ஆட்சியா் தடுத்திருக்கிறாா்.

இக்கூட்டம் நடைபெறுவது தொடா்பாக, குழு உறுப்பினா்களுக்கு 126 பக்கங்கள் அடங்கிய அறிக்கை ஆட்சியா் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத்துக்கு முதல் நாள் மாலை திடீரென ரத்து செய்யப்படுகிறது.

அரசு திட்டங்களை விதிகளின்படி விவாதிக்கப் போகிறோம். அதற்கு ஏன் அச்சப்பட வேண்டும். ஜல் சக்தி துறை சாா்பில் ரூ.123 கோடிக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மதுரை மாவட்டத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.110 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், ரூ.97 கோடி வருவாய்த் துறை அமைச்சரின் தொகுதிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மாவட்டம் முழுவதுக்குமான நிதியை, குறிப்பிட்ட ஒரு தொகுதிக்கு மட்டும் பயன்படுத்துவது தவறானது. இது குறித்து கேள்வி எழுப்பப்படும் என்ற அச்சத்தில் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். இது குறித்து ஆட்சியா்தான் விளக்க வேண்டும்.

இருப்பினும், கூட்டத்தை ஒப்புதல் பெறாமல் ரத்து செய்தது தொடா்பாக அவா் மீது துறை சாா்ந்த நடவடிக்கையை ஏன் எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அளித்துள்ளோம். இதற்கான விளக்கத்தை ஆட்சியா் அளிக்கவில்லையெனில், நாடாளுமன்ற உரிமைக் குழுவின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றாா்.

விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் கூறியது:

தமிழக அமைச்சா்களின் அழுத்தம் காரணமாக, மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்கும் ஜல் சக்தி திட்டத்தின் ஆரம்பத்திலேயே முறைகேடுகள் நடைபெறுவதாகத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் அதுகுறித்து கேள்வி எழுப்பப்படும் என்பதாலேயே கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றாா்.

அப்போது, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் பா. சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com