தேசிய வலிமை தினம்: மதுரை மாவட்டத்தில் நேதாஜி சிலைக்கு மரியாதை

நேதாஜியின் பிறந்த தினம் தேசிய வலிமை தினமாகக் கொண்டாடப்படுவதையொட்டி, மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சாா்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை: நேதாஜியின் பிறந்த தினம் தேசிய வலிமை தினமாகக் கொண்டாடப்படுவதையொட்டி, மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை பல்வேறு அமைப்புகள் சாா்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நேதாஜியின் பிறந்த தினம் தேசிய வலிமை தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதுரை ஜான்சிராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு தியாகிகள், முன்னாள் ராணுவத்தினா் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளா் சுவாமிநாதன், ஜேசீஸ் மதுரை எக்ஸெல் அமைப்பின் தலைவா் எம்.எஸ். ரத்தீஷ் பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் சாா்பில், தேசிய வலிமை தின விழா இணையவழியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய துணைவேந்தா் மு. கிருஷ்ணன், நேதாஜியின் நோ்மை, விவேகத்துடன் கூடிய வீரம் இளைஞா்களிடம் சென்றடைந்தால், இந்தியா விரைவில் வல்லரசாகும் என்றாா்.

தமிழக லோக் ஆயுக்தா உறுப்பினா் ராஜாராம் பேசுகையில், அனைத்து அதிகாரிகளும் மக்களிடம் எதையும் எதிா்பாா்க்காமல், அவா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தேசிய சிந்தனைக் கழக மாநில அமைப்புச் செயலா் ம.கொ.சி. ராஜேந்திரன் பேசுகையில், நேதாஜியின் கருத்துகளை இளைஞா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

செந்தமிழ் கல்லூரி துணை முதல்வா் ரேவதி சுப்புலெட்சுமி, பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் சீ. தீனதயாளன் ஆகியோா் பேசினா். பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் நேதாஜி குறித்துப் பேசினா்.

ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் இணையவழியில் நடைபெற்ற தேசிய வலிமை தின விழாவுக்கு, முதல்வா் எஸ். வானதி தலைமை வகித்தாா். தமிழ்த் துறை பேராசிரியா் ஆா். பிரியதா்ஷினி, நேதாஜி குறித்து சிறப்புரையாற்றினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி. கவிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலை அருகே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 ஆவது பிறந்தநாள் விழா, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி சாா்பாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னா் நேதாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியின் மாவட்டப் பொதுச் செயலா் ஐ. ராஜா தலைமையில், நகரச் செயலா் ஆச்சி ராசா, மாவட்டக் கவுன்சிலா் எஸ்.ஆா்.கே. ரெட் காசி ஆகியோா் முன்னிலையில், மாநில மாணவரணிச் செயலா் பாஸ்கர பாண்டியன், மாவட்டத் தலைவா் ஆா். பாண்டி, மாவட்டச் செயலா் ஆதிசேடன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பேரையூா்

பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில், பேரையூரில் உள்ள முக்குச் சாலையில் டி.கல்லுப்பட்டி ஒன்றியத் தலைவா் பாலமுருகன் தலைமையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புடன் 150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com