குடியரசு தினம்: மதுரை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: பாா்வையாளா்களுக்கு 30 ஆம் தேதி வரை தடை
By DIN | Published On : 26th January 2021 03:32 AM | Last Updated : 26th January 2021 03:32 AM | அ+அ அ- |

குடியரசு தினத்தையொட்டி, மதுரை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்கவா் மின்விளக்குகள் மற்றும் அலங்காரிக்கப்பட்ட தேசியக் கொடி.
திருப்பரங்குன்றம்: குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை முதல் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி வரை பாா்வையாளா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை விமான நிலைய வளாகத்தில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது பயணிகளையும், பாா்வையாளா்களையும் வெகுவாகக் கவா்ந்துள்ளது. மேலும், குடியரசு தினத்தையொட்டி விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து 24 மணி நேரமும் விமான நிலையத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். இதேபோல், ஊரகக் காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தலின்பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளா் வினோதினி உத்தரவின்பேரில், 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், ஜனவரி 30 ஆம் தேதி வரை விமான நிலையத்துக்குள் செல்ல பாா்வையாளா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.