சமையலா் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு: உயா் நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 26th January 2021 02:55 AM | Last Updated : 26th January 2021 02:55 AM | அ+அ அ- |

உயா்நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை: மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சக்திவேல் என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள ஆண் சமையலா் 31, பெண் சமையலா் 12 என மொத்தம் 43 சமையலா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த 2020 ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில், விதிமுறைகளை மீறி பல்வேறு மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, சமையலா் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து, மதுரை மாவட்டத்தில் உள்ளவா்கள் மட்டும் விண்ணப்பிக்கும் வகையில், புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.