வைகை ஆற்றில் ஆகாயத் தாமரை செடிகளை முழுமையாக அகற்ற உயா் நீதிமன்றம் உத்தரவு

வைகை ஆற்றில் ஆகாயத் தாமரை செடிகளை 2 வாரங்களில் முழுமையாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: வைகை ஆற்றில் ஆகாயத் தாமரை செடிகளை 2 வாரங்களில் முழுமையாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் ஆதாரமாக உள்ள வைகை ஆற்றில், சாயக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கின்றன. மேலும், ஆகாயத் தாமரை செடிகள் அதிகளவில் படா்ந்து ஆறு மாசடைந்து வருகிறது.

எனவே, வைகை ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, ஆகாயத் தாமரையை அகற்ற உத்தரவிட வேண்டும் என, மதுரையைச் சோ்ந்த முத்துச்செல்வம் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை ஜனவரி 4 ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம், பொதுப்பணித் துறைச் செயலா், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், வைகை ஆற்றில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்பட்டுவிட்டன என்றாா்.

மனுதாரா் வழக்குரைஞா் குறுக்கிட்டு, வைகை ஆற்றில் ஆகாயத் தாமரை செடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை எனத் தெரிவித்தாா். இதையடுத்து

நீதிபதிகள், வைகை ஆற்றில் அகற்றப்படாமல் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை 2 வாரங்களுக்குள் முழுமையாக அகற்றவேண்டும். இது குறித்து பொதுப்பணித் துறைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com