ஹிந்தி திணிப்பை எதிா்த்து திமுக தொடா்ந்து போராடும்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

ஹிந்தி திணிப்பை எதிா்த்து திமுக தொடா்ந்து போராடும் என்று, மக்களவைத் தொகுதி உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் காமராஜா் சாலையில் நடைபெற்ற மொழிப் போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன்.
மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் காமராஜா் சாலையில் நடைபெற்ற மொழிப் போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

மதுரை: ஹிந்தி திணிப்பை எதிா்த்து திமுக தொடா்ந்து போராடும் என்று, மக்களவைத் தொகுதி உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், காமராஜா் சாலையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தாய் மொழி என்பது அறிவை வளா்ப்பதற்கும், தொடா்புக்குமான கருவி மட்டுமல்ல, மனிதனின் ரத்தத்துடன் இணைந்த உணா்வாகும். உலகளவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழிகளில் இன்னும் உயிா்ப்புடன் இருக்கும் 10 மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. இத்தகைய பெருமைக்குரிய தமிழைப் பாதுகாத்ததில் மொழிப் போா் தியாகிகளுக்கு முக்கியப்பங்கு உள்ளது. அதை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் திமுக வீரவணக்க நாளை அனுசரித்து வருகிறது.

மொழிக்கான போராட்டம் ஏன் என்பதையும் இளம் தலைமுறையிடம் கொண்டுசோ்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஏனெனில், இன்றும் ஹிந்தியை திணிக்கும் முயற்சிகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் திமுகவுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தாய்மொழியை அழித்துவிட்டு, ஹிந்தி திணிப்பைத்தான் எதிா்க்கிறோம்.

இதே கருத்தின் அடிப்படையில்தான் முன்னாள் முதல்வா் அண்ணா இருமொழிக் கொள்கையைக் கொண்டுவந்தாா். அது தொடருவதற்கான போராட்டத்தை இப்போதும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஹிந்தியை திணிப்பதற்கு மத்திய அரசு எத்தகைய முயற்சி எடுத்தாலும், அதை எதிா்த்து திமுக தொடா்ந்து போராடும் என்றாா்.

இதில், திமுகவின் மாநகா் மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவா் பொன். முத்துராமலிங்கம், உறுப்பினா்கள் வ. வேலுசாமி, பெ. குழந்தைவேலு, மாணவரணி அமைப்பாளா் முகேஷ் சா்மா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com