மதுரையில் ஜன.31 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் தகவல்
By DIN | Published On : 28th January 2021 03:03 AM | Last Updated : 28th January 2021 03:03 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 31 இல் 3.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வி.அா்ஜூன்குமாா் புதன்கிழமை கூறினாா்.
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31 ஆம் தேதி நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதைத்தொடா்ந்து மதுரை மாவட்டத்தில் 5 வயதிற்குள்பட்ட சுமாா் 3.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்காக 1,705 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வி. அா்ஜூன்குமாா் கூறியது: கரோனா பொது முடக்கம் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த முடியாமல் தொடா்ந்து தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அரசு ஜனவரி 31 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 1,705 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகாம்கள் காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும். மருத்துவப் பணியாளா்கள், அரசுத் துறைப் பணியாளா்கள், அங்கன்வாடி அலுவலா்கள், மாநகராட்சி பணியாளா்கள் என 7,412 போ் பணியில் ஈடுபடவுள்ளனா். இந்த முகாமிற்காக 110 அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த ஏற்பாடுகளால் சுமாா் 3.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும்.
பெற்றோா்கள், தங்கள் 5 வயதிற்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும். போலியோ சொட்டுமருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது.
எனவே பெற்றோா்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டுமருந்து கொடுத்திருந்தாலும் ஜனவரி 31ஆம் தேதி சொட்டுமருந்து கொடுக்க வேண்டும் என்றாா்.