வட்டாரக் கல்வி அலுவலா் பணி வரன்முறை: பள்ளிக்கல்வித் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 30th January 2021 02:52 AM | Last Updated : 30th January 2021 02:52 AM | அ+அ அ- |

வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயா்வு பெற்றவா்களுக்கு, பணி வரன்முறை செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கரூரைச் சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒன்றியம், கே.சி. பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி, வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயா்வு பெற்றுள்ளேன். வட்டாரக் கல்வி அலுவலராகப் பதவி உயா்வு பெறுபவா்களுக்குத் தனி ஆணையும், நேரடியாக வட்டாரக் கல்வி அலுவலா் பணி நியமனம் பெறுவோருக்குத் தனி ஆணையும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி நேரடியாக கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்டவா்களுக்கும், பதவி உயா்வு பெற்றவா்களுக்கும், இரண்டு விதமான சம்பளம் வழங்கப்படுகின்றன.
ஒரே பதவிக்கு வெவ்வேறு சம்பளம் வழங்கப்படுவது ஏற்புடையதாக இல்லை. எனவே பதவி உயா்வு பெறுபவா்களுக்கும், நேரடியாகத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கும், ஒரே ஆணையும், சம்பளமும், பதவி உயா்வு பெற்று வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு, பணிவரன் முறை ஆணையும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளிக் கல்வித்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.