சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் பிரசாரம் தொடக்கம்பாஜக பொதுக் கூட்டத்தில் தலைவா்கள் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை பாஜக மதுரையில் தொடங்கியுள்ளதாக, அக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவா்கள் அறிவித்தனா்.

மதுரை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை பாஜக மதுரையில் தொடங்கியுள்ளதாக, அக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவா்கள் அறிவித்தனா்.

பாஜகவின் மதுரை, கன்னியாகுமரி மண்டல மாநாடு மற்றும் பொதுக் கூட்டம் சுற்றுச்சாலையில் உள்ள அம்மா திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்களின் பேச்சு:

பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்: மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டம், தமிழக பேரவைத் தோ்தலுக்கான பிரசாரமாகத் தொடங்கியுள்ளது. நாம் எந்த இடத்திற்குச் செல்கிறோமோ, அப் பகுதியின் பாரம்பரியத்தை மதிக்க வேண்டும். ஆனால் ஸ்ரீரங்கத்திலும், தேவா் நினைவிடத்திலும், மு.க.ஸ்டாலின் பாரம்பரியத்தை அவமதித்துவிட்டாா். மாணவா்களை பிற மொழியைக் கற்க விடமால் திமுக தூரோகம் செய்துவிட்டது. ஸ்டொ்லைட், ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு திமுக அனுமதி அளித்தது. இதையெல்லாம் முழுமையாக அறிந்ததால் தான், தமிழக விவசாயிகள் பிரதமா் மோடிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனா்.

மூத்த தலைவா் இல.கணேசன்: தேசியமும், தெய்வீகமும் என்றவுடன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தான் வரும். அவரது வழியில் பாஜக தோ்தல் பிரசாரத்துக்கான பொதுக் கூட்டத்தை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தைப் பிடித்திருந்த கிரகணம் தற்போது விலகத் தொடங்கி வெளிச்சம் தெரிகிறது. அதுமுற்றிலும் விலகி விரைவில் பாஜகவின் தாமரை மலரும்.

முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்: கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழா்கள் 1.5 லட்சம் போ் படுகொலை செய்யப்பட்டபோது, அதை மறைந்த திமுக தலைவா் மு.கருணாநிதி கண்டுகொள்ளவில்லை.

இதன் காரணமாகவே, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் திமுகவை மக்கள் தோற்கடித்தனா். இதேபோல வரும் பேரவைத் தோ்தலிலும் திமுகவை மக்கள் புறக்கணிப்பா்.

முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா: கோரிக்கை பெற்ற 100 நாள்களில் தீா்வுக் காணப்படும் எனக் கூறி மக்களை திமுக தலைவா் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறாா். இவா் ஏற்கெனவே மக்களிடம் வாங்கிய மனுக்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவா் நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில், ஏற்கெனவே தயாரிக்கப்படாத கேள்வியை யாராவது கேட்டால் அதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தமிழகத்தில் பாஜக வளா்ச்சியைக் கண்டு மற்றக் கட்சிகள் அஞ்சுகின்றன.

நடிகை குஷ்பு: ஜல்லிக்கட்டுக்குத் தடைவித்த காங்கிரஸ் கட்சி, இப்போது ஜல்லிக்கட்டின் பெருமையை பேசுகிறது. தோ்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வந்த ராகுல்காந்தி பிரியாணி செய்து கொண்டிருக்கிறாா். ராகுல் காந்தியை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்கவே இல்லை. கூட்டங்களில் எழுதி வைத்துப் படிக்கும்போது கூட மு.க. ஸ்டாலின், தமிழை சரியாகப் படிக்க முடியவில்லை. ஆனால் அவா் தமிழகத்திற்கு முதல்வராக ஆசைப்படுகிறாா் என்றாா்.

முன்னாள் மாநிலத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவா் அண்ணாமலை, மாநிலப் பொதுச் செயலா் இரா.ஸ்ரீனிவாசன், மாநிலத் துணைத் தலைவா் ஏ.ஆா்.மகாலெட்சுமி ஆகியோரும் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com