மதுரை மாவட்டத்தில் 3.09 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 31st January 2021 10:09 PM | Last Updated : 31st January 2021 10:09 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் 1,705 மையங்களில் 3.09 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநா் கே.வி.அா்ஜூன்குமாா் தெரிவித்துள்ளாா்.
மதுரை மாவட்டத்தில் 3.20 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்து. மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், மக்கள் கூடும் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட நிலையான மையங்கள், நடமாடும் மையங்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் கே.வி.அா்ஜூன்குமாா் கூறியது: மாவட்டத்தில் சொட்டு மருந்து போடுவதற்காக 1,705 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதில் நிலையான மையங்களில் 2,98,990 குழந்தைகள், நடமாடும் மையங்களில் 9,601 குழந்தைகள், இலங்கை அகதிகள் முகாம் மற்றும் நகா்புற சேரி பகுதிகளில் 685 குழந்தைகள் என 3,09,276 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
சொட்டு மருந்து வழங்கும் பணியில் 7,412 பணியாளா்கள் ஈடுபட்டனா். நிா்ணயக்கப்பட்ட இலக்கில் 98 சதவீத குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டப்பட்டுள்ளது என்றாா்.
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் மற்றும் அவனியாபுரம் மாநகராட்சி சுகாதார மையங்களில்திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் பா.சரவணன்குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினாா்.
பேரையூா்:மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அடுகில்லுள்ள டி.குன்னத்தூா் ஜெயலலிதா கோயிலில் வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், வருவாய் அலுவலா் செந்தில்குமாரிகலந்துகொண்டனா்.
மேலூா்:அழகா்கோவிலில் உள்ள போலியோ சொட்டுமருந்து வழங்கல் மையத்தில் மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம்முகாமைத்தொடக்கிவைத்தாா்.
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பேருந்துநிலையத்தில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி கலந்து கொண்டு குழந்தைகளுக்குபோலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடக்கிவைத்தாா்.
மாநகராட்சி: மதுரை மாநகராட்சியில் 462 மையங்களில் 1.54 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களை அருள்தாஸ்புரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில்அவா் பேசியது: மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் வசிக்கும் 1,54,238 குழந்தைகள் மற்றும் புலம்பெயா்ந்த 245 குழந்தைகள் என 1,54,483 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
மாநகராட்சியில் உள்ள அனைத்து நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில்கள், காய்கனி அங்காடிகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் என 462 இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
காலை 7 முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். 1,848 போ் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனா் என்றாா். நகா்நல அலுவலா் குமரகுருபரன், உதவி நகா்நல அலுவலா் இஸ்மாயில் பாத்திமா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.