டிஎன்டி சாதி சான்றிதழ் கோரி சாலை மறியல்:அமைச்சா்கள் சமரசம்
By DIN | Published On : 31st January 2021 02:45 AM | Last Updated : 31st January 2021 02:45 AM | அ+அ அ- |

மதுரை: டிஎன்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சீா்மரபினா் நலச் சங்கத்தினரிடம் அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
சீா்மரபினருக்கு மாநிலத்தில் டிஎன்சி எனவும், மத்தியில் டிஎன்டி எனவும் சான்றிதழ் வழங்கக் கூடாது. டிஎன்டி என ஒற்றைச் சான்றிதழாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சீா்மரபினா் நலச் சங்கத்தின் சாா்பில் ஆரப்பாளையத்தில் உள்ள திரையரங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலா் கதிரவன், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் மாநிலத் தலைவா் திருமாறன் ஆகியோா் பங்கேற்றனா். போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லும்படி கூறி, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் ஒரு மணி நேரம் போராட்டம் தொடா்ந்தது. இதையறிந்த வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன், கூட்டுறவுத்துறை செல்லூா் கே.ராஜூ ஆகியோா் மறியல் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்தனா். பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அருகே உள்ள பூங்காவிற்கு அழைத்துச்சென்று பேசினா். அப்போது சீா்மரபினா் நலச்சங்கத்தினா் தங்களின் கோரிக்கைகள் குறித்து பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் முதல்வா் மற்றும் துணை முதல்வரைச் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசுவதாகவும் உறுதியளித்ததால் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.