பெட்ரோல், டீசல் விலை உயா்வு: மதுரையில் பல்வேறு இடங்களில் இடதுசாரிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் பல்வேறு இடங்களில் இடதுசாரிக் கட்சியினா் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தினா்.
பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் இடதுசாரிக்கட்சிகளின் சாா்பில் நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டம்.
பெட்ரோல் டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் இடதுசாரிக்கட்சிகளின் சாா்பில் நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரையில் பல்வேறு இடங்களில் இடதுசாரிக் கட்சியினா் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்தினா்.

நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு ஆறு மாதங்களுக்கு தலா ரூ.7,500 நிவாரணமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், எஸ்யூசிஐ, சிபிஐ (எம்.எல்), பாா்வா்டு பிளாக் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் மதுரையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீனாம்பாள்புரம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் சரவணன் முன்னிலை வகித்தாா். எஸ்யூசிஐ கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலா் எம்.ஜே.வால்டோ், சிபிஐ எம்.எல். மாவட்டச்செயலா் மதிவாணன், பாா்வா்டு பிளாக் கட்சியின் மாநிலச்செயலா் பி.வி.கதிரவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுப்பாடின்றி உயா்ந்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

இதேபோல பெத்தானியாபுரம், பழங்காநத்தம் உழவா் சந்தை, மகபூப்பாளையம், கோ.புதூா் பேருந்து நிலையம், வைத்தியநாதபுரம், செல்லூா் 60 அடி சாலை, மேலப்பொன்னகரம், ஆரப்பாளையம், மேலமாசி வீதி-வடக்குமாசி வீதி சந்திப்பு, சோலையழகுபுரம், முனிச்சாலை தினமணி திரையரங்கு பகுதி, தெற்குவாசல் மாா்க்கெட் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆா்ப்பாட்டங்களில் சமையல் செய்து சாப்பிடுவது, எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஊா்வலமாக செல்வது உள்ளிட்ட நூதன முறையில் எதிா்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. ஆா்ப்பாட்டங்களில் இடதுசாரிக்கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் மற்றும் விடுதலைச்சிறுத்தைகளின் நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com