பாளை. சிறையில் கைதி கொலையான வழக்கு: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவு
By DIN | Published On : 06th July 2021 03:38 AM | Last Updated : 06th July 2021 03:38 AM | அ+அ அ- |

மதுரை: பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலையான வழக்கு விசாரணையின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் முத்துமனோ (27). இவரை கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்த போலீஸாா், ஏப்ரல் 22 ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா். அங்கு, கைதிகள் இடையே நடைபெற்ற மோதலில் முத்துமனோ கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இக்கொலை வழக்கு தொடா்பாக சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகனின் இறப்புக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என முத்துமனோவின் தந்தை பாபநாசம் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இறந்தவரின் உடலை அவரது உறவினா்கள் பெற்றுக்கொள்ளாவிட்டால், ஜூலை 2 ஆம் தேதி இரவு 7 மணிக்குள் அரசு சாா்பில் இறுதிச் சடங்கை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதைத் தொடா்ந்து, இறந்தவரின் உடல் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், இந்த வழக்கு தொடா்பாக 70 நாள்களுக்கு மேலாகியும் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை உரிய முறையில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவா்கள் தரப்பிலிருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டனா். மேலும், மனுதாரருக்கு என்னென்ன கோரிக்கைகள் உள்ளன என்பது குறித்து கூடுதல் மனுவாக ஜூலை 14 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் எனக் கூறி, விசாரணையை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.