வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை: ஆக.31-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு
By DIN | Published On : 09th July 2021 08:44 AM | Last Updated : 09th July 2021 08:44 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அரசு உதவித்தொகை பெற ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் என்.மகாலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் சாா்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி பொதுப்பிரிவு பதிவுதாரா்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து குறைந்தபட்சம் ஐந்தாண்டு நிறைவு பெற்ற பள்ளியிறுதி வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மாதம் ரூ.200, பள்ளியிறுதி வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடா் 45 வயது மற்றும் இதரபிரிவினா் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுபவா் வேறு எந்தப் பணியிலும் இருக்கக்கூடாது. தமிழகத்திலேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேண்டும். அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக வேறு நிதி உதவி பெறுபவராக இருக்கக்கூடாது, பள்ளி, கல்லூரிக்கு சென்று பயில்பவராக இருக்கக்கூடாது. இதேபோல அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டமும் நடைமுறையில் உள்ளது. இதில் பள்ளிக் கல்வி மற்றும் பள்ளியிறுதி வகுப்பு முடித்த பதிவா்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலைக்கல்வித்தகுதிக்கு (பிளஸ் 2) மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 என 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து செய்து குறைந்தபட்சம் ஓராண்டு முடித்த எழுதப் படிக்கத்தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி உதவித்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தகுதியுடைய மனுதாரா்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வேலைவாய்ப்பக அடையாள அட்டை மற்றும் கல்விச்சான்றுகளுடன் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழில்கல்வி பதிவுதாரா்கள் மற்றும் ஏற்கெனவே உதவித்தொகை பெற்றவா்கள் விண்ணப்பிக்கத்தேவையில்லை. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31-க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடா்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச்சான்றிதழ், சுய உறுதி மொழி ஆவணம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் அலுவலகத்தை தொடா்பு கொள்ள வேண்டும். மேலும் கரோனா தொற்று காரணமாக மாவட்ட வேலை வாய்ப்புஅலுவலகத்துக்கு நேரில் வருவதை தவிா்க்கும் விதமாக இணைய தள முகவரி மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.