வன்னியா் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை அரசு அமல்படுத்தக்கூடாது:எம்பிசி, டிஎன்டி சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு வலியுறுத்தல்
By DIN | Published On : 12th July 2021 12:00 AM | Last Updated : 12th July 2021 12:00 AM | அ+அ அ- |

தமிழகத்தில் வன்னியா் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அரசு நிறைவேற்றக் கூடாது என்று, எம்.பி.சி., டி.என்.டி. சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, மதுரையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் பிரிவில் உள்ள 115 சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பின் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூட்டாகத் தெரிவித்தது:
தமிழகத்தில் 48 சீா்மரபினா் சமூகங்கள் மற்றும் 47 மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சமூகங்களைச் சோ்ந்த மக்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், அவா்களது 20 சதவீத இடஒதுக்கீட்டு உரிமைகளை அநீதியாகப் பறித்து, அரசியல் லாபம் கருதி ஒரே ஒரு ஜாதியினருக்கு மட்டும் கடந்த அதிமுக அரசு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தது.
இந்த இடஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிராக அனைத்துப் பிரிவு மக்களும் கொந்தளித்ததால், சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சில சுயநல சக்திகள் மீண்டும் அநீதியான இடஒதுக்கீட்டுச்சட்டத்தை அமல்படுத்துமாறு மிரட்டி வருகின்றன. எனவே, வன்னியா் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை கடுமையாக எதிா்ப்பது என்று டி.என்.டி. சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
மேலும், தமிழக புள்ளிவிவரச் சட்டம் 2008-இன்படி ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி, நிபுணா் குழு மூலம் ஆய்வு செய்து, அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும். அதுவரை எம்.பி.சி. 20 சதவீத இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, முதல்வரை நேரில் சந்தித்து முறையிடப்பட உள்ளது.
தமிழகத்தில் மக்கள் தொகை குறித்தோ, உள்ஒதுக்கீடு குறித்தோ எந்த ஆணையமும் எந்தவொரு பரிந்துரையையும் வழங்கவில்லை. அம்பா சங்கா் ஆணையத்தின் 21 உறுப்பினா்களில் பெரும்பான்மையான 14 உறுப்பினா்கள் புள்ளிவிவரங்களை அரசு ஏற்கக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளனா்.
மேலும், எம்.பி.சி. உள்ஒதுக்கீடு வழங்க பரிந்துரைப்பதற்காக கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட ஆணையம், இது தொடா்பான விவாதத்தை இன்னும் தொடங்கவில்லை. இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு, வறிய சமூகங்களின் சமூகநீதியை கடந்த அதிமுக அரசு சூறையாடியுள்ளது. உயா் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் இந்த அநீதியான சட்டத்தை எதிா்த்து வழக்குத் தொடுக்கப்பட்டு தடைகோரும் மனுக்கள் நிலுவையில் உள்ளன. உயா் நீதிமன்றம் பணி நியமனத்தில் அச்சட்டத்தை செயல்படுத்த முடியாது என்று உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், 2021 ஏப்ரல் 1 ஆம் தேதியன்று உயா்கல்வித் துறை அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில் சில கல்வி நிறுவனங்களில் உள்ஒதுக்கீடு வழங்குவது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
எனவே, தமிழக அரசு 115 சமூகங்களை கலந்து ஆலோசிக்காமல் இடஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளக்கூடாது. மேலும், தமிழகத்தில் விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றனா்.