கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: விண்ணப்பங்கள் பரிசீலனை குறித்து உயா் நீதிமன்றம் கேள்வி
By DIN | Published On : 13th July 2021 03:56 AM | Last Updated : 13th July 2021 03:56 AM | அ+அ அ- |

மதுரை: கீழமை நீதிமன்ற அரசு வழக்குரைஞா் நியமனத்தில் விண்ணப்பங்கள் எதனடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு விரைவில் அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தகுதியில்லாதவா்கள் அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்பட்டால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்படும்.
எனவே, 2017 ஆம் ஆண்டின் விதிகளின் அடிப்படையிலும், உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையிலும் சட்ட வல்லுநா் குழு அமைத்து, மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்களை நியமிக்கவும், அரசு வழக்குரைஞா்கள் விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும் என, மதுரையைச் சோ்ந்த கண்ணன் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.
முந்தைய விசாரணையின்போது, எந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் படி அரசு வழக்குரைஞா்கள் நியமனம் செய்யப்படுகிறாா்கள் என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அரசு தலைமை வழக்குரைஞா் ஆஜராக காலஅவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, தற்போது மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கான அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளில் சில தளா்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாவட்ட நீதிமன்றங்களுக்கான அரசு வழக்குரைஞா்கள் நியமனத்துக்கு அதிக விண்ணப்பங்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது. சுமாா் 2 லட்சம் விண்ணப்பங்கள் வந்தால், அவற்றை எதனடிப்படையில் பரிசீலனை செய்து தோ்வு செய்வீா்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.