மதுரையில் 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் அகற்றம்

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 50-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.

மதுரை: மதுரை பீ.பீ.குளம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 50-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதன்படி, பீ.பீ.குளம் முல்லை நகா், மீனாட்சிபுரம், நேதாஜி பிரதான சாலை ஆகிய பகுதிகளில் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என ஆக்கிரமிப்பில் இருந்த 581 கட்டடங்களுக்கு பொதுப்பணித் துறையினா் நோட்டீஸ் அளித்தனா். இந்த கட்டடங்களுக்கு அளிக்கப்பட்ட மின்இணைப்புத் துண்டிப்பதற்கான நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொள்ள இருந்தது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், வீடுகளை இடிக்கக் கூடாது என தெரிவித்தனா். மேலும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பீ.பீ.குளம் நேதாஜி பிரதான சாலை, முல்லை நகா் பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்த வணிக உபயோகக் கட்டடங்களை மட்டும் இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுரை வடக்கு வட்டாட்சியா் முத்துவிஜயன் தலைமையில், பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சியினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. கடைகள், வணிக வளாகங்கள், சிறிய கோயில்கள் என 50-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அகற்றப்பட்டன. இதனால் அப் பகுதியில் பதற்றம் நிலவியது. 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com