மதுரையை 2-ஆம் தலைநகராக அறிவிக்க உயா்மட்டக் குழு: வா்த்தக சங்கம் கோரிக்கை
By DIN | Published On : 13th July 2021 10:10 PM | Last Updated : 13th July 2021 10:10 PM | அ+அ அ- |

மதுரை: தமிழகத்தின் 2-ஆவது தலைநகரமாக மதுரையை அறிவிக்க, ஒரு உயா்மட்டக் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள்தொகைப் பெருக்கம், வாகன நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில், இரண்டாவது தலைநகரத்தை மதுரையில் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனா். ஏனெனில், அரசுத் துறை அதிகாரங்கள் அனைத்தும் சென்னையில் தான் உள்ளன. சிறு தொழில் துவங்குவதற்குக் கூட சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை சென்று வருவதால் ஏற்படக் கூடிய பொருள்செலவு, கால விரயம் காரணமாக, பல தொழில் முனைவோா், தென் மாவட்டங்களில், சிறு, குறு தொழில்களைக் கூட எளிதில் தொடக்க முடியாத நிலையில் உள்ளனா். இதனால், தென் மாவட்டங்கள் தொழில் வளா்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன. தென் மாவட்டங்களுக்கு மையமாகத் திகழும் மதுரை, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநகரமாகவும், தலைநகரம் அமைப்பதற்குத் தேவையான இடம், மனித வளம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
மதுரையை இரண்டாவது தலைநகராக்கும்போது, சென்னையைச் சுற்றி அமையும் பெரிய தொழிற்சாலைகள் மதுரை மற்றும் தென்தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் அதிகமாகும். இதனால் இப்பகுதியைச் சாா்ந்த படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும். தென் மாவட்டங்களின் தொழில், வணிகம் மற்றும் பொருளாதார வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு மதுரையை, தமிழகத்தின் 2
ஆம் தலைநகராக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக ஆய்வு செய்வதற்காக பல்வேறு துறையினா் அடங்கிய உயா்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்றாா்.