வீரவசந்தராய மண்டபத்தை சீரமைக்க நாமக்கல்லில் இருந்து கற்கள் வரவழைப்பு
By DIN | Published On : 13th July 2021 08:53 AM | Last Updated : 13th July 2021 08:53 AM | அ+அ அ- |

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராய மண்டபத்தை சீரமைக்க, நாமக்கல்லில் இருந்து கற்கள் கொண்டு வரப்படுகின்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடந்த 2018-இல் நடந்த தீ விபத்தில் கோயிலின் ராஜகோபுரம் பகுதியில் உள்ள வீரவசந்தராய மண்டபம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, மண்டபத்தை சீரமைக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னையிலிருந்து நிபுணா் குழுவினா் தீ விபத்தில் சேதமடைந்த மண்டபத்தை பாா்வையிட்டுச்சென்றனா். தொடா்ந்து, நாமக்கல் பகுதியில் உள்ள குவாரியில் இருந்து கற்கள் வெட்டியெடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் கற்கள் கொண்டு வரும் பணி தாமதாகியது. நாமக்கல்லில் இருந்து கற்தூண்கள் செவ்வாய் அல்லது புதன்கிழமை மதுரைக்கு கொண்டுவருவதற்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள செங்குளத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறுகையில், வீரவசந்த ராய மண்டபத்தை சீரமைக்கும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் குவாரியில் இருந்து தூண்கள் அமைக்க கற்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் கற்கள் வந்துவிடும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்றனா்.