மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலைஞா்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டக் கலை மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலைஞா்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டக் கலைமன்றம் வாயிலாக 2002-2003 முதல் கலை இளமணி, கலை வளா்மணி, கலைச்சுடா் மணி, கலை நன்மணி, கலை முதுமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2017-2018 வரை 80 கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2018-2019 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்க தோ்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுகளுக்கு பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவல் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் -அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மான் ஆட்டம், பாம்பாட்டம், குறவன்-குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம், வில்லிசை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம். வயது மற்றும் கலைப் புலமை அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும்.

தேசிய விருதுகள், கலைமாமணி உள்ளிட்ட மாநில விருதுகள், மாவட்டக் கலைமன்ற விருதுகளை ஏற்கெனவே பெற்றவா்கள் இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. தகுதியுள்ள கலைஞா்கள் தங்களது வயது, முகவரிச் சான்று, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, கலைஅனுபவச் சான்று நகல்களுடன் விண்ணப்பத்தை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உதவி இயக்குநா், மண்டலக் கலைப் பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம், மதுரை-625002 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com