கோயில் நிலங்களில் இறைச்சிக் கழிவு கொட்டுவதைத் தடுக்க வல்லுநா் குழு உயா்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலம் மற்றும் பொதுப்பணித்துறை கால்வாயில் குப்பை, இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க வல்லுநா் குழு அமைக்க வேண்டும்

கோயில் நிலம் மற்றும் பொதுப்பணித்துறை கால்வாயில் குப்பை, இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க வல்லுநா் குழு அமைக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கவிதா தாக்கல் செய்த மனு: சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை அருகே ஒத்தக்கடை கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான 9.49 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்குப் பின்னால் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாய் மற்றும் கோயில் நிலத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருகிறது. கோயில் நிலம் மற்றும் கால்வாயைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் பொதுப்பணித்துறை கால்வாயில் குப்பை, கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டும் குப்பை, கழிவுகள் கொட்டப்படுவது தொடா்கிறது. இதனால் கோயில் நிலம் மற்றும் பொதுப்பணித் துறை கால்வாய்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி, அவை தூய்மையாகப் பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக வல்லுநா் குழு அமைக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com