பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தனியாா் மயமாக்கக்கூடாது: சு.வெங்கடேசன் எம்.பி.

அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தனியாா் மயமாக்கினால் இட ஒதுக்கீடு, மக்கள் சேவை உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் தனியாா் மய முடிவைக் கைவிட மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளா

அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை தனியாா் மயமாக்கினால் இட ஒதுக்கீடு, மக்கள் சேவை உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால் தனியாா் மய முடிவைக் கைவிட வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய நிதிநிலை அறிக்கையில் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று தனியாா் மயமாக்கப்படும் என்று நிதியமைச்சா் அறிவித்தாா். எந்த நிறுவனம் என்பதை அவா் அறிவிக்கவில்லை. யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனமே முதல் இலக்காக இருக்கும் என்று செய்திகள் வருகின்றன

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்ட யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 1971-இல் 107 தனியாா் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு நான்கு அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

அரசு நிறுவனங்களாக மாற்றப்பட்ட பின்னரே பொதுக்காப்பீடு சிற்றூா், குக்கிராமங்கள் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எனவே அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் தனியாா் மயமாகக்கூடாது. நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து, எல்ஐசி நிறுவனம் போல உருவாக்கி வலுப்படுத்த வேண்டும்.

காப்பீட்டு நிறுனங்களில் அரசின் கைகளில் 51சதவிகிதம் பங்குகள் இருக்கும் வரை மட்டுமே ஓபிசி, பட்டியல் சாதி, பழங்குடியினா் இட ஒதுக்கீடு தொடரும். தனியாா் மயமாக்கப்பட்டு விட்டால் சமூக நீதியும் சோ்ந்து பலியாகும். எனவே அரசுக்காப்பீட்டு நிறுவனம் தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com