தமிழக நலனுக்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்: முன்னாள் அமைச்சா்செல்லூா் கே.ராஜூ
By DIN | Published On : 28th July 2021 07:51 AM | Last Updated : 28th July 2021 07:51 AM | அ+அ அ- |

ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிா்க்கட்சியாக இருந்தாலும் தமிழக நலனுக்கான நடவடிக்கைகளைஅதிமுக மேற்கொள்ளும் என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
குடியரசு முன்னாள் தலைவா் ஏ..ஜெ.அப்துல்கலாமின் நினைவு தினத்தையொட்டி அனுப்பானடியில் ரத்த தான முகாம செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்.ஜே.தமிழ்மணி அறக்கட்டளை, என்.எம்.ஆா்.சுப்பராமன் மகளிா் கல்லூரி, பிளாசம்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து இந்த முகாமை நடத்தின. முகாமைத் தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டப் பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாததே தோல்விக்குக் காரணம் என்று முன்னாள் எம்பி
அன்வர்ராஜா பேசியிருப்பது தவறான கருத்து. ஏனெனில் எம்ஜிஆா், ஜெயலலிதாவை முன்னிறுத்தியே தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதிமுகவின் தோல்வி எதிா்பாராதது.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிா்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காக நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளும். அதன் அடிப்படையிலேயே, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இருவரும் பிரதமரைச் சந்தித்து தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி கூடுதலாக ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனா். திமுகவினா் ஒன்றிய அரசு எனக் கூறி சிறுமைப்படுத்தினாலும், தமிழகத்திற்கு தாராளமான முறையில் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது என்றாா்.