கீழமை நீதிமன்ற அரசு வழக்குரைஞா் நியமன விதிமுறைகளைத் தாக்கல் செய்ய உத்தரவு

கீழமை நீதிமன்ற அரசு வழக்குரைஞா் நியமன விதிகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: கீழமை நீதிமன்ற அரசு வழக்குரைஞா் நியமன விதிகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு: மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு விரைவில் அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட உள்ளனா். தகுதியில்லாதவா்கள் அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்பட்டால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்படும்.

எனவே 2017 ஆம் ஆண்டின் விதிகளின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல் அடிப்படையிலும் சட்ட வல்லுநா் குழு அமைத்து மாவட்ட நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்களை நியமிக்கவும், அரசு வழக்குரைஞா்கள் விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அரசு வழக்குரைஞா்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா் சங்க அலுவலகத்தில் ஒட்டப்படும். 1961 ஆம் ஆண்டின் அரசாணையை பின்பற்றி அரசு வழக்குரைஞா் நியமனம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் எந்த விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் படி அரசு வழக்குரைஞா்கள் நியமனம் செய்யப்படுகிறாா்கள் என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com