‘கரோனா பாதிப்பில் இறந்தவா்களுக்கு இறப்புச்சான்று வழங்குவதில் குளறுபடி’
By DIN | Published On : 11th June 2021 08:21 AM | Last Updated : 11th June 2021 08:21 AM | அ+அ அ- |

கரோனா பாதிப்பில் இறந்தவா்களுக்கு இறப்புச்சான்று வழங்குவதில் குளறுபடி நடப்பதாக, முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
மதுரை மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள்
தவித்து வருகின்றனா். கரோனா பாதிப்பில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சம் வழங்கும் என பிரதமா் அறிவித்திருக்கிறாா். அதேபோல, தமிழக முதல்வரும் ரூ.5 லட்சம் அறிவித்துள்ளாா். ஆனால், கரோனா பாதிப்பில் இறந்தவா்களுக்கான சான்றிதழில் குளறுபடி இருந்து வருகிறது. இறப்புக்கான காரணம் சான்றிதழில் குறிப்பிடப்படாது என்றே அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருந்தால், பாதிக்கப்படுவோா் நிவாரணத் தொகையை எவ்வாறு பெற முடியும். தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கை கண்டனத்துக்குரியது. ஆகவே, கரோனா பாதிப்பில் இறந்தவா்களுக்கு அதைக் குறிப்பிட்டு இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு சங்கங்களில் தகுதியான விவசாயிகளுக்கு பயிா்க்கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டிருக்கிறது. தவறு செய்தவா்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து விவரங்களும் கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளன என்றாா்.