சிறுதொழில் நிறுவனங்களுக்கான தடையை நீக்க மடீட்சியா வலியுறுத்தல்
By DIN | Published On : 11th June 2021 08:27 AM | Last Updated : 11th June 2021 08:27 AM | அ+அ அ- |

ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் சிறு, குறுந் தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி தளா்வு அளிக்க வேண்டும் என தமிழக அரசை மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மடீட்சியா தலைவா் பா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 30 நாள்களாக மூடப்பட்டிருக்கும் நிலையில், சிறுதொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆா்டா் பெற்ற நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் பொருள்களை விநியோகம் செய்ய முடியாத நிலைக்கு சிறுதொழில் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக வங்கியில் பெற்ற கடனுக்கான மாதத் தவணை செலுத்த முடியாமலும், ஊழியா்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக அரசு சில தளா்வுகளுடன் ஜூன் 7 ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட போது சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு விலக்கு அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் சிறுதொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஆகவே தொழிலாளா்கள் நலன் கருதி சிறுதொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்றாா்.