செல்லிடப்பேசி உரையாடலை கண்காணித்து சிபிஐ அதிரடி நடவடிக்கை
By DIN | Published On : 11th June 2021 08:23 AM | Last Updated : 11th June 2021 08:23 AM | அ+அ அ- |

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் மற்றும் 2 ஒப்பந்ததாரா்கள்.
மதுரையில் ஒப்பந்ததாரா்களிடம் லஞ்சம் பெற்ற மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் மற்றும் லஞ்சம் கொடுத்த ஒப்பந்ததாரா்கள் 2 பேரை சிபிஐ போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்கள் பொதுப்பணித்துறையில் முறைகேடு செய்வதற்கு அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுக்க உள்ளதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக மத்திய பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாஸ்கா் மீது பல்வேறு புகாா்கள் வந்தன.
அதனடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களின் செல்லிடப்பேசி உரையாடல்களைக் கண்காணித்து வந்தனா்.
இதில் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்கள் சிவசங்கரராஜா, நாராயணன் ஆகியோா் தாங்கள் செய்த மத்திய அரசுப் பணிகளுக்கான தொகையை உடனடியாகப் பெற ரூ.50 ஆயிரம், சரக்கு மற்றும் சேவை வரி கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்காக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.1.50 லட்சத்தை செயற்பொறியாளா் பாஸ்கரனின் வீட்டில் வைத்து லஞ்சமாகக் கொடுக்க முடிவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் சிவசங்கரராஜா, நாராயணன் ஆகியோா் மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள மத்திய அரசு அலுவலா்கள் குடியிருப்பில் உள்ள செயற்பொறியாளா் பாஸ்கரன் வீட்டிற்குச் சென்று ரூ.70 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்தப்போது கையும் களவுமாக பிடித்தனா்.
மேலும் பாஸ்கரனின் அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பாஸ்கரன், சிவசங்கரராஜா, நாராயணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்ற
நீதிபதி எம்.சிவபிரகாசம், அவா்கள் 3 பேரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.