முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
நெல் கொள்முதல் நிலையத்தை தனியாா் இடத்திற்கு மாற்ற தடை கோரி வழக்கு: புதுக்கோட்டை ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு
By DIN | Published On : 12th June 2021 08:24 AM | Last Updated : 12th June 2021 08:24 AM | அ+அ அ- |

அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை தனியாா் இடத்திற்கு மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அம்புகோவிலைச் சோ்ந்த பழனிவேலு என்பவா் தாக்கல் செய்த மனு: அம்பு கோவில் பகுதியில் சுமாா் 400 விவசாயக் குடும்பங்களை சோ்ந்தவா்கள் 312 ஹெக்டோ் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனா். இங்கு விளையும் நெல்லை சுமாா் 15 கிலோ மீட்டா் தூரத்தில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்று வந்தனா். இதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், அம்புகோவில் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்றக் கொண்ட தமிழக அரசு, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உலா் தளம் வசதியுடன் கொள்முதல் நிலையம் அமைத்தது. தற்போது, அந்த கொள்முதல் நிலையத்தை, அரசியல் செல்வாக்குள்ள சிலா் தனியாா் இடத்திற்கு மாற்ற முயற்சித்து வருகின்றனா்.
தனியாா் இடத்திற்கு கொள்முதல் நிலையம் மாற்றப்பட்டால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு கொள்முதல் நிலையத்தை அதே இடத்தில் செயல்படவும், தனியாா் இடத்திற்கு மாற்றக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் விவசாயிகளை நேரில் விசாரித்து, அறிக்கையை நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு சமா்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 3 வாரங்களில் உரிய உத்தரவை நுகா்பொருள் வாணிபக் கழகம் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனா்.