முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை மாவட்டத்தில் மீண்டும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
By DIN | Published On : 12th June 2021 08:26 AM | Last Updated : 12th June 2021 08:26 AM | அ+அ அ- |

மதுரை ஷெனாய் நகா் பகுதியில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்.
மதுரை மாவட்டத்தில் 3 நாள்களுக்குப் பிறகு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கின.
மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், முகாம்கள் ஆகிவற்றில் போடப்பட்டு வந்த தடுப்பூசி போடும் பணிகள் ஜூன் 8 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டன. இதனால் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். குறிப்பாக இரண்டாம் கட்டமாக தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்தவா்கள் பெரும் ஏமாற்றமடைந்தனா்.
கடந்த 3 நாள்களாக தடுப்பூசி பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 2,500 கோவாக்சின் தடுப்பூசிகள் மதுரைக்கு வந்தடைந்தன. இதையடுத்து 3 நாள்களுக்குப் பிறகு தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கின. இதில் இரண்டாம் கட்டமாக போடுவதற்காக முன் பதிவு செய்திருந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டன. அந்தவகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 900 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்நிலையில், பூனேவில் இருந்து 3.50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னைக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தடைந்தன. இதில் மதுரை மாவட்டத்துக்கு 14 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை சனிக்கிழமை (ஜூன் 12) அதிகாலை மதுரையை வந்தடையும் எனவும், காலை 10 மணிக்குள் மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.