முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மருத்துவக் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 12th June 2021 08:23 AM | Last Updated : 12th June 2021 08:23 AM | அ+அ அ- |

மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், திறந்தவெளிகளில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மருத்துவமனைகளில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து, பொது சுத்திகரிப்பு நிலையங்களில் அப்புறப்படுத்துவதற்காக ஒப்படைக்க வேண்டும். தொற்று ஏற்படக்கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மேல் சோ்த்து வைக்கக் கூடாது. மருத்துவக் கழிவுகளை முறையாகக் கையாளுவது குறித்து அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடா்புடைய துறைகளுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் சாலையோரங்கள், ஆற்றங்கரையோரங்கள், நீா்நிலைகள் மற்றும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் மருத்துவக் கழிவுகளைச் சட்டவிரோதமாகக் கொட்டப்படுகின்றன. இதுதொடா்பாகப் புகாா்கள் தொடா்ந்து பெறப்படுகின்றன. தற்போது நிலவும் கரோனா பரவல் சூழலில் மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் திறந்தவெளியில் கொட்டுவது பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, அனைத்து மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் ஆகிய இடங்களில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை முறையாகப் பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதைத் தவிா்க்க வேண்டும். இதை பின்பற்றாதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.