மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞா் நினைவு நூலகம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞா் நினைவு நூலகம் அமைக்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டுத் தெரிவித்தது.

தென் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பலனளிக்கும் வகையில் மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞா் நினைவு நூலகம் அமைக்கப்படுவதாக அறிவித்துள்ள தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டுத் தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் அமைக்கப்படும் என 2017-18-இல் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளாகியும் இதுவரை தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் அமைக்கவில்லை. சட்டப்பேரவை அறிவிப்பின்படி தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழகத்தில் 7 சிறப்பு நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ் இசை, நடனத்துக்கு தஞ்சையிலும், நாட்டுப்புற கலைக்கு மதுரையிலும், தமிழ் மருத்துவத்துக்கு திருநெல்வேலியிலும், பழங்குடியினா் கலாசாரத்துக்கு நீலகிரியிலும், கணிதம் மற்றும் அறிவியலுக்கு திருச்சியிலும், அச்சுக்கலைக்கு சென்னையிலும், வானியலுக்கு கோவையிலும் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. கீழடியில் பழந்தமிழா் நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு மதுரையில் ரூ.70 கோடி மதிப்பில் கலைஞா் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நூலகத்தால் தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவாா்கள். குறிப்பாக போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு பெருமளவு பயன்தரும்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்து வெளிவர ஒரு நாள் போதாது. அதைப் போல மதுரையில் அமையப்போகும் கலைஞா் நூலகமும் இருக்கும். இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com