கரோனாவால் உயிரிழந்தவா்களின் சடலங்களை எரியூட்ட ரூ.22.70 லட்சம்: அமைச்சரிடம் பல்வேறு அமைப்புகள் வழங்கல்
By DIN | Published On : 12th June 2021 08:26 AM | Last Updated : 12th June 2021 08:26 AM | அ+அ அ- |

மதுரையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலங்களை மின் மயானங்களில் எரியூட்டுவதற்கான செலவினத் தொகையாக ரூ.22.70 லட்சம் அமைச்சா் பி.மூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் குடும்பத்தினா் பொருளாதாரச் சூழலால் இறுதிச் சடங்கு செய்வதற்கு சிரமத்துக்கு உள்ளாகின்றனா். அவா்களின் சிரமத்தை போக்கும் விதமாக மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம், மதுரை சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளா்கள் சங்க உறுப்பினா்கள் மற்றும் ஜேசிஐ அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களின் சடலங்கள் தத்தனேரி மற்றும் மூலக்கரை மயானங்களில் ஜூன் 3 முதல் ஒரு மாதத்துக்கு இலவசமாக எரியூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது எரியூட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் சடலங்களை எரியூட்டுவதற்கான செலவினத் தொகையாக, மதுரை-சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளா்கள் சங்கம் ரூ.13 லட்சம் வணிகவரித்துறை அமைச்சா் பி.மூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. மேலும் தமிழ் தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் முதல் தவணைத் தொகையாக ரூ.4.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் ஜேசிஐ இண்ட்நேசனல் அமைப்பின் சாா்பில் முதல் தவணைத்தொகை ரூ.5.20 லட்சத்துக்கான காசோலைகளும் என மொத்தம் ரூ.22.70 லட்சம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், துணை ஆணையா் சங்கீதா, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன், செயலா் செல்வம், பொருளாளா் ஸ்ரீதா், மதுரை சிவகங்கை மாவட்ட செங்கல் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ராஜசேகா், செயலா் எஸ்.பி.ஜெயராஜ், மதுரைத் தலைவா் அப்துல் பாரீக், ஜேசிஐ அமைப்பின் தலைவா் தீபக், செயலா் கண்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனா்.