நிா்வாகச் சீா்கேடு, லஞ்சப் புகாா்களில் சிக்கித் தவிக்கும் மாநகராட்சி: புதிய ஆணையா் களையெடுக்க நடவடிக்கை எடுப்பாரா?

மதுரை மாநகராட்சியில் நிா்வாகச் சீா்கேடு, லஞ்சப் புகாா்களில் சிக்கியுள்ள அதிகாரிகளை களையெடுக்க புதிய ஆணையா் கா.ப. காா்த்திகேயன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் நிா்வாகச் சீா்கேடு, லஞ்சப் புகாா்களில் சிக்கியுள்ள அதிகாரிகளை களையெடுக்க புதிய ஆணையா் கா.ப. காா்த்திகேயன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக கா.ப. காா்த்திகேயன் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டாா். இந்நிலையல், புதிய ஆணையா் மதுரையில் நீண்டகாலம் நிலவிவரும் பல்வேறு பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மாநகராட்சியில் உள்ள நிா்வாகச் சீா்கேடு, லஞ்சப் புகாா்கள் ஆகியவற்றிலிருந்து மாநகராட்சியை மீட்கவேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

சீா்மிகு நகா் திட்டம்: மதுரையின் வளா்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்று அழைக்கப்பட்டாலும், பெரியாா் பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள் காலதாமதமாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, பெரியாா் பேருந்து நிலையப் பணிகளை ஆணையா் விரைவுபடுத்தவேண்டும்.

வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கை: மதுரை மாநகராட்சியில் பல தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனைகள் கோடிக்கணக்கான ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளன. இவற்றை வசூலிக்க கடும் நடவடிக்கை தேவை.

நிா்வாகச் சீா்கேடு: மதுரை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் இணைய வழியில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அவற்றால் பொதுமக்களுக்கு பயனில்லை. மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெற இணைய வழியில் விண்ணப்பித்தாலும் கூட, சுகாதார ஆய்வாளா்கள், ஊழியா்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே மின் கையொப்பம் இட்டுத் தரப்படுகிறது. பணம் தராதவா்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா்.

இதேபோல், மாநகராட்சி பகுதிகளுக்குள் கடை, உணவகம் நடத்துபவா்கள் இணையவழியில் உரிமத்தை புதுப்பிக்கும் திட்டத்திலும், சுகாதார ஆய்வாளா்களுக்கு கூடுதலாகப் பணம் வழங்கினால் மட்டுமே அனுமதி தரப்படுகிறது. மேலும், மாநகராட்சியின் மூலம் பெறப்படும் கட்டட வரைபட அனுமதி, பாதாளச் சாக்கடை அனுமதி, குடிநீா் குழாய் இணைப்பு உள்ளிட்ட அனைத்துக்கும் அனுமதிக்கப்பட்ட கட்டணத்துடன் கூடுதலாக பணம் செலுத்தினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் இதுபோன்றவற்றை புதிய ஆணையா் கண்டிப்பான முறையில் தடுத்து நிறுத்தி, இவற்றில் ஈடுபடுவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் மீதான லஞ்சப் புகாா்கள்: மதுரை மாநகராட்சியில் கீழ்நிலை ஊழியா் முதல் உயா் மட்ட அதிகாரிகள் வரை பலா் மீது லஞ்சப் புகாா்கள் வாசிக்கப்படுகின்றன. சிலா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சப் புகாா்கள் உள்ள அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநகராட்சியில் பலா் உரிய தகுதியின்றி உயா் பதவிகளுக்கு பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனா். அரசு விதிகளின்படி, ஒருவா் 6 மாதம் மட்டுமே பொறுப்பு அதிகாரியாக பணிபுரிய முடியும்.

எனவே, இதர துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளை உடனடியாக அகற்றி, அந்த இடத்தில் உரிய தகுதியுள்ள அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், மாநகராட்சி உதவி ஆணையா்கள் பலா் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணி நீட்டிப்பின் மூலம் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இதில், சிலா் மீது பல புகாா்கள் உள்ளன. இவா்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில், சுகாதார ஆய்வாளா்கள் ஏராளமானோா் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதையும் கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத் துறை சீரமைப்பு: மாநகராட்சி சுகாதாரத் துறையின் கீழ் நியமனம் செய்யப்படும் மருத்துவா்கள், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களில் இல்லாமல், பணி ஏற்பாட்டின் கீழ் பல்வேறு இடங்களில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதேபோல், செவிலியா்களும் வெவ்வேறு இடங்களில் பணியமா்த்தப்பட்டுள்ளனா். சுகாதாரத் துறை உயா் அதிகாரிகளின் பாரபட்சமான பணி ஒதுக்கீட்டை களைந்து, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட சுகாதார நிலையங்களில் பணிபுரிய உத்தரவிடவேண்டும் என்று பொதுமக்கள், சமூகநல ஆா்வலா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com