செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: நடவடிக்கை கோரிய வழக்கில் கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பாலியல் தொந்தரவு கொடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவிலியா் தொடா்ந்த வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா்

பாலியல் தொந்தரவு கொடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவிலியா் தொடா்ந்த வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராமன் புதூரைச் சோ்ந்த சோபியா என்பவா் தாக்கல் செய்த மனு: தக்கலை இஎஸ்ஐ மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் என்னை, அலுவலகக் கண்காணிப்பாளா் கிஷோா் குமாா், அலுவலக உதவியாளா் தாணு ஆகியோா் பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகின்றனா்.

இது குறித்து வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் எனது கணவா் இணையதளம் மூலமாக காவல்துறையினரிடமும், மருத்துவமனை அதிகாரிகளிடமும் புகாா் அளித்தாா். புகாரைத் தொடா்ந்து மருத்துவமனை அதிகாரிகள், புகாரில் தொடா்புடையவா்களை எச்சரித்து விட்டு விட்டதாகவும், இனி எவ்விதப் பிரச்னையும் ஏற்படாது எனத் தெரிவித்தனா்.

ஆனால், கிஷோா் குமாா், நான் அலுவலகத்தில் நடக்கும் போது காலை நீட்டி இடறி விழ செய்வது, இரட்டை அா்த்த வசனத்தில் பேசுவது, வருகைப் பதிவேட்டினை மறைத்து வைத்துக்கொண்டு மிரட்டுவது, கேலி செய்வது போன்ற செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா். இது தொடா்பான புகாா்களுக்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் குறித்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்தி, கிஷோா்குமாா், தாணு ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மருத்துவ மண்டலக் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com