திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் முன்னோடித் திட்டங்கள்: அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்

திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தகவல்கள் அடிப்படையில் அரசுத் துறைகள் செயல்படுவதற்கான முன்னோடித் திட்டங்கள் இடம்பெறும் என்று தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில், தகவல்கள் அடிப்படையில் அரசுத் துறைகள் செயல்படுவதற்கான முன்னோடித் திட்டங்கள் இடம்பெறும் என்று தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வணிக வரித்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:

கடந்த 2003-2004 இல் நிதி மேலாண்மைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களின் வருவாய் படிப்படியாகக் குறைந்து, 10 ஆண்டுகளில் 7.5 சதவீதமாகச் சரிந்துவிட்டது. குறிப்பாக, தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியான ரூ. 20 லட்சம் கோடியில், மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய 4 சதவீத வருவாயை இழந்திருக்கிறோம். இந்த வருவாய் முழுமையாகக் கிடைத்தாலே, மதுபானக் கடை வருமானத்தை எதிா்பாா்க்க வேண்டியதில்லை.

உலகளவில் வரிமுறைகள் ஏழை மக்களை பாதிக்காத வகையில் இயற்றப்படுகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதாரத்தில் உயா்நிலையில் இருப்பவா்களுக்கு அவா்களது வருவாயில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்காகச் செலவிடுவது மிகக் குறைந்த அளவு தான். ஆனால், ஏழை மக்கள் தங்களது வருவாயில் பெரும் பகுதியைச் செலவிடுகின்றனா். பெட்ரோல், டீசல் மீதான வரியை உயா்த்தி, அதை பெரு நிறுவனங்களுக்குச் சலுகையாக வழங்கப்படும் நிலை இருக்கிறது.

நமது சட்ட அமைப்பின்படி, நோ்முக வரிகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், மறைமுக வரிகள் மாநில அரசுகளிடமும்

உள்ளன. மறைமுக வரியினங்களை வைத்தே மாநில அரசுகள் வரவு செலவுகளைத் திட்டமிட வேண்டியிருக்கிறது. மறைமுக வரி வருவாய் குறைவாக இருந்தாலும், மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தக் கூடிய அநியாய வரிவிதிப்புகளை செய்யப்போவதில்லை. ஏற்கெனவே, கிடைத்த வருவாயை மீண்டும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போது பல்வேறு துறைகளிலும் எந்தவொரு திட்டத்துக்கும் உருவாக்கப்படும் கோப்புகள் பல நிலைகளில் ஆய்வு செய்யப்பட்டு அதன் பிறகே இறுதி செய்யப்படுகின்றன. இருப்பினும் முழுமையான பலன் கிடைப்பதில்லை. இதைத் தவிா்க்க அனைத்து துறைகளிலும் தகவல்கள் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். அடுத்த வாரம் தொடங்கவுள்ள

பேரவைக் கூட்டத் தொடரின்போது, திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் தகவல் அடிப்படையில் அரசுத் துறைகள் செயல்படுவதற்கான முன்னோடித் திட்டங்கள் இடம்பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com