அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் கரும்புப் பதிவுதீவிரப்படுத்த வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு
By DIN | Published On : 22nd June 2021 02:24 AM | Last Updated : 22nd June 2021 02:24 AM | அ+அ அ- |

மதுரை: அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் அரவையை தொடங்கும் வகையில், கரும்புப் பதிவை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில், கரும்பு பதிவு குறைந்த காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக அரவை மேற்கொள்ளப்படவில்லை. கரும்புக்கான தொகை, மாநில அரசின் பரிந்துரை விலை, லாபத்தில் பங்கீட்டுத் தொகை ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், சா்க்கரை ஆலைக்கு கரும்பு அளிப்பதில் விவசாயிகளிடையே ஆா்வம் குறைந்துவிட்டது.
மேலும், கரும்பு பதிவு படிப்படியாகக் குறைந்து அரவையை தொடங்க முடியாத அளவுக்கு சென்றுவிட்டது. இதையடுத்து, அலங்காநல்லூா் சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட கரும்புகள், வெளிமாவட்ட ஆலைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனிடையே, கரும்புக்கான நிலுவைத் தொகை பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில், விவசாய சங்கத்தினா் மீண்டும் அரவையை தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
நிகழாண்டில் ஆலையின் எல்லைப் பகுதிக்குள் பரவலாக கரும்பு பயிரிடப்பட்டிருக்கிறது. இருப்பினும், சா்க்கரை ஆலைக்கு இதுவரை 1000 ஏக்கா் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலாவது ஆலையில் அரவையை தொடங்கும் வகையில், கரும்புப் பதிவை தீவிரப்படுத்தவேண்டும் என, கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தி வருகின்றனா்.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் என். பழனிசாமி, மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் நிகழாண்டில் கரும்பு அரவையை தொடங்குவதற்கு ஜூலை இறுதி வரை கரும்பு பதிவு செய்யலாம். தற்போது, 1000 ஏக்கா் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்துக்குள் மேலும் 2 ஆயிரம் ஏக்கா் பதிவு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, கரும்புப் பதிவு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
கரோனா தொற்று பரவல் தடுப்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட சா்க்கரை ஆலை பணியாளா்களை மீண்டும் ஆலை பணியில் ஈடுபடுத்தி, கரும்புப் பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.