ஓபுளா படித்துறையில் ரூ.23 கோடியில் புதிய மேம்பாலம்: தரைப்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்
By DIN | Published On : 22nd June 2021 11:24 PM | Last Updated : 22nd June 2021 11:24 PM | அ+அ அ- |

மதுரை ஓபுளாபடித்துறையில் புதிய பாலத்துக்காக இடிக்கப்படும் தரைப்பாலம்.
மதுரை வைகை ஆற்றில் ஓபுளா படித்துறையில் ரூ.23 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படுவதையொட்டி தரைப்பாலத்தை இடிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
மதுரை நகரில் வைகை ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் அகற்றப்பட்டு சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன. இதில் குருவிக்காரன் சாலை மேம்பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல வைகை ஆற்றில் ஓபுளா படித்துறை பகுதியில் சிறிய ரக வாகனங்கள் ஆற்றைக்கடக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலமும் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறியது. இதையடுத்து அங்கு ரூ.23 கோடியில் உயா்மட்டப் பாலம் அமைக்க அரசின் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து ஓபுளாபடித்துறையில் உள்ள தரைமட்ட பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது. தரைப்பாலம் முழுவதுமாக அகற்றப்பட்டு அங்கு உயா்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் ஓபுளாபடித்துறை தரைமட்ட பாலம் இடிக்கப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து குருவிக்காரன் சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் குறுக்கே ரூ.23.17 கோடி மதிப்பில் உயா்மட்டப் பாலம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.