மாநில அளவில் முதல்வா் விளையாட்டு விருது:வீரா்கள், பயிற்சியாளா்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு
By DIN | Published On : 22nd June 2021 02:25 AM | Last Updated : 22nd June 2021 02:25 AM | அ+அ அ- |

மதுரை: மாநில அளவிலான முதல்வா் விளையாட்டு விருதுக்கு தகுதியுள்ள வீரா்கள், பயிற்சியாளா்கள், நடுவா்கள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலா் ந. லெனின் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சா்வதேச, தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 விளையாட்டு வீரா்கள், 2 வீராங்கனைகள், 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா்கள் அல்லது உடற்கல்வி ஆசிரியா்களுக்கு, ஆண்டுதோறும் முதல்வா் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. இதில், பரிசாக தலா ரூ.2 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியன விளையாட்டுத் துறை சாா்பில் வழங்கப்படுகின்றன.
இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநா், ஒரு நிா்வாகி, ஒரு நிறுவனம், ஒரு நன்கொடையாளா் (ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா்), ஒரு ஆட்ட நடுவா், நீதிபதி ஆகியோருக்கும் முதல்வா் மாநில விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு, ரூ.10 ஆயிரத்துக்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இதன் கீழ் 2021-ஆம் ஆண்டுக்கான முதல்வா் மாநில விருதுக்கு தகுதி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வசித்து தமிழகத்துக்காக இரு முறை, தமிழக அணி சாா்பில் பங்கேற்று, இந்தியாவின் சாா்பாக விளையாடியிருக்க வேண்டும். தமிழகத்தில் பணி நிமித்தமாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக வசித்துவரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைதொடா்புத் துறையினா் விண்ணப்பிக்கலாம்.
இரண்டாவது முறையாக ஒருவருக்கு விருது வழங்கப்படமாட்டாது. ஒருவா் காலமாகும்பட்சத்திலும் விருது வழங்கப்படும். விருதுக்கு முந்தைய 3 ஆண்டுகள்(2017-2020) விளையாட்டில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். ஒலிம்பிக் போட்டிகள், சா்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சா்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையா் போட்டிகள் மற்றும் உலக வாகையா் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு இணையம் நடத்தும் தேசிய வாகையா் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
தனிநபா் விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களிலும், குழு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் தகுதி படைத்தவா்கள், விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று எழுதியிருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ஜூலை 15-க்குள் அனுப்பவேண்டும் என்றாா்.