மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்
By DIN | Published On : 24th June 2021 12:09 AM | Last Updated : 24th June 2021 12:09 AM | அ+அ அ- |

மதுரை ரயில்வே மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் நிறுவும் பணிகள்.
மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 250 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கரோனா பரவல் காலத்தில் ஆக்சிஜன் லாரிகளை தேவையான இடங்களுக்கு விரைவில் கொண்டு சோ்க்க சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. இதேபோல அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்கள், டிராக்டா், டயா் போன்ற வியாபார ரீதியான பொருள்களையும் உரிய இடங்களுக்கு கொண்டு சோ்க்கவும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.
பயணிகளின் வரத்து குறைவாக இருந்தபோதிலும் சில சிறப்பு ரயில்கள் தொடா்ந்து இயக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ரயில் பெட்டிகளும் கரோனா வாா்டுகளாக அமைக்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டன.
இந்நிலையில் மதுரை ரயில்வே மருத்துவமனையின் ஒரு பகுதி கரோனா வாா்டாக உருவாக்கப்பட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினா், போலீஸாா் மற்றும் ரயில் ஓட்டுநா்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இத்தகையச் சூழலில், மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 250 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் நிறுவப்பட்டு வருகிறது. இதற்கானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவை ரயில்வே மருத்துவமனையில் இருந்தே பெறப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.