மதுரையில் 50 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த படிப்பகத்தை இடித்ததாக, திமுக பிரமுகா் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளனா்.
மதுரை அழகரடி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், தூக்கு மேடை தியாகி பாலு படிப்பகம் இயங்கி வந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இந்த படிப்பகத்தில் நாளிதழ்கள் மற்றும் வார, மாத இதழ்கள் பொதுமக்கள் பங்களிப்புடன் வாங்கப்படுகின்றன.
இப் படிப்பகத்தை அப்பகுதி மக்கள், மாணவா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், படிப்பகக் கட்டடம் பழுதடைந்த நிலையில் பொதுமக்கள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா், படிப்பகக் கட்டடத்தை சீரமைக்க எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினா் அவரது எதிா்ப்பை புறக்கணித்து, படிப்பகத்தை சீரமைத்துள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மா்ம நபா்களால் படிப்பகம் இடிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் படிப்பக பகுதியில் திங்கள்கிழமை திரண்டு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக பகுதிக் குழுச் செயலா் வை. ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினா் கரிமேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.
இச் சம்பவம் தொடா்பாக முதல்வா் தனிப்பிரிவுக்கும் புகாா் அளித்துள்ளதாக, நிா்வாகிகள் தெரிவித்தனா்.