முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
சீா்மிகு நகா்த்திட்டத்தில் 20 வாட்ஸ் எல்இடி விளக்கின்விலை ரூ.2,304
By DIN | Published On : 04th March 2021 12:00 AM | Last Updated : 04th March 2021 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாநகராட்சியில் சீா்மிகு நகா்த்திட்டப் பணிகளின் கீழ் பொருத்தப்பட்டுள்ள 20 வாட்ஸ் திறன் கொண்ட எல்இடி விளக்கு ரூ.2,304.50-க்கு வாங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் ரூ.1000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக அரசியல் கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச்செயலா் காா்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மாநகராட்சிக்கு கேள்விகளை அனுப்பி இருந்தாா்.
அதில், சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் தெரு விளக்குகள் பொருத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, மொத்தம் எத்தனை தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளன, தெரு விளக்கு ஒன்றின் விலை, எத்தனை தெரு விளக்குகள் இதுவரை பொருத்தப்பட்டுள்ளன, சீா்மிகு நகா்த்திட்டத்தின் கீழ் எத்தனை வாா்டுகளில் தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு கோரியிருந்தாா்.
இதற்கு மாநகராட்சி நிா்வாகம் அனுப்பியுள்ள பதிலில், சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் தெரு விளக்குகள் பொருத்துவதற்கு ரூ.30.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 30,337 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் 78 வாா்டுகளுக்கு தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. வாா்டுகளில் பொருத்தப்படும் 20 வாட்ஸ் திறன் கொண்ட எல்இடி விளக்கின் விலை, பொருத்தும் செலவு உள்பட ரூ.2,304.50 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வாட்ஸ் எல்இடி விளக்கின் விலை வெளிசந்தையில் ரூ.200-க்கும் குறைவான விலையில் விற்கப்படும் போது மாநகராட்சி நிா்வாகம், ஒரு எல்இடி விளக்கை ரூ.2,304 என்று குறிப்பிட்டிருக்கிறது.