முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மாநகராட்சி தொழில் உரிமம் புதுப்பிப்பதில் முறைகேடு: கூடுதல் தொகை வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா்
By DIN | Published On : 04th March 2021 12:15 AM | Last Updated : 04th March 2021 12:15 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாநகராட்சியில் தொழில் உரிமம் புதிதாக வழங்குவது மற்றும் புதுப்பிப்பதற்கு கூடுதல் தொகை வசூலித்து முறைகேட்டில் ஈடுபடுவதாக சுகாதார ஆய்வாளா்கள் மீது புகாா் எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் பெட்டிக்கடை, டீக்கடை, உணவகம், மளிகைக்கடை உள்ளிட்ட அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் மாநகராட்சியில் இருந்து தொழில் உரிமம் பெற வேண்டும். தொழில் நிறுவனங்களின் இட அளவைப் பொறுத்து சிறிய அளவிலான கடைகளுக்கு குறிப்பிட்ட அளவிலான கட்டணம் மற்றும் குப்பை வரியும் போடப்பட்டு தொழில் உரிமம் வழங்கப்படுகிறது. பெரிய நிறுவனங்களுக்கு சதுரஅடி மற்றும் தளங்கள் கணக்கிடப்பட்டு அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையின் அளவும் கணக்கிடப்பட்டு குப்பை வரியுடன் தொழில் உரிமக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஓராண்டு வரை செல்லுபடியாகும் தொழில் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையராக ச.விசாகன் பொறுப்பேற்றபோது, தொழில் உரிமம் புதுப்பிப்பதை இணைய தளம் மூலமாக விண்ணப்பித்து அதற்குரிய கட்டணத்தை அனைத்து வரி வசூல் நிலையங்களிலும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொழில் உரிமம் புதுப்பிப்பதற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பித்தால் அதை உரிய காலத்தில் சுகாதார ஆய்வாளா்கள் வழங்குவது இல்லை என்று புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக கடை மற்றும் நிறுவன உரிமையாளா்கள் கூறும்போது, சிறிய
அளவிலான டீக்கடைகளுக்கு தொழில் உரிமக்கட்டணமாக ரூ.750 மற்றும் குப்பை வரி ரூ.1000 ஆயிரம் என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.3 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே தொழில் உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது இணைய தளம் மூலமாக விண்ணப்பித்தாலும் கூட தொழில் உரிமத்தில் சுகாதார ஆய்வாளா்கள் கையெழுத்திட வேண்டியுள்ளதால் அதையும் நிறுத்தி வைத்து விடுகின்றனா். கூடுதல் தொகை கிடைத்தால் மட்டுமே கையெழுத்திட்டு வழங்குகின்றனா். எனவே தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு சுகாதார ஆய்வாளா்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நடைமுறையை மாற்றினால் இதில் முறைகேடுகள் குறையும் என்றனா்.
இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முறைகேடு தொடா்பாக உரிமையாளா்கள் மாநகராட்சியில் புகாா் அளிக்கலாம். கூடுதல் தொகை வசூலிக்கும் சுகாதார ஆய்வாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.