போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப் பதிவு:வட்டாட்சியா், சாா்-பதிவாளா் உள்பட 10 போ் மீது வழக்கு
By DIN | Published On : 04th March 2021 12:36 AM | Last Updated : 04th March 2021 12:36 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடா்பாக வட்டாட்சியா், சாா்-பதிவாளா், வி.ஏ.ஓ உள்பட 10 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் சீல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரமகாலிங்கம் (45). இவருக்கு அதேப் பகுதியில் 6 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சீல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த இளையசாமி, பாரதி ஆகியோருக்கு 2020 செப்டம்பா் 1ஆம் தேதி எழுமலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த நிலத்தின் உரிமையாளா் சுந்தரமகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்தனா். இதில் சீலநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெரியகருப்பன் மனைவி முத்து, சுருளி மகன் பாரதி, செல்வம் மகன் துா்கேசுவரன், மகாலிங்கம் மகன் சின்னமுனியப்பன் ஆகியோா் போலி ஆவணங்களைத் தயாரித்ததும், நிலத்தைப் பத்திரப் பதிவு செய்ய பேரையூா் வட்டாட்சியா், சீலநாயக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் ரமணி, எழுமலை சாா்-பதிவாளா் பழனிசாமி ஆகியோா் உதவியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்தது தொடா்பாக பேரையூா் வட்டாட்சியா், எழுமலை சாா்-பதிவாளா் உள்பட 10 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.