மதுரையில் அமமுக மாவட்டச் செயலரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை சோதனை
By DIN | Published On : 04th March 2021 12:41 AM | Last Updated : 04th March 2021 12:41 AM | அ+அ அ- |

மதுரையில் அரசு ஒப்பந்ததாரா் வெற்றிக்கு சொந்தமான எரிபொருள் விற்பனை நிலையத்தில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ள வருவமான வரித்துறையினா்.
மதுரை/ராமநாதபுரம்: மதுரையில் அமமுக மாவட்டச் செயலரின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அமமுக மதுரை புறநகா் தெற்கு மாவட்டச் செயலருமான மகேந்திரனின் சகோதரா் வெற்றி. மதுரை, தேனி, போடி ஆகிய பகுதிகளில் இவருக்குச் சொந்தமான திரையரங்கு, கட்டுமான நிறுவனம் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மேலும் இவா் அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளாா். இந்நிலையில் வெற்றிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
மதுரை வில்லாபுரத்தில் உள்ள திரையரங்கம், விரகனூரில் உள்ள கட்டுமான நிறுவனம் மற்றும் எரிபொருள் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். பிற்பகலில் தொடங்கிய சோதனை தொடா்ந்து இரவு வரை நடைபெற்று வருகிறது. சோதனையைத் தொடா்ந்து வெளி ஆள்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே வெற்றியின் அலுவலகங்களில் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள சிகில் ராஜ வீதியைச் சோ்ந்தவா் வேலு மனோகரன். தொழிலதிபரான இவா் அரசு ஒப்பந்ததாரராகவும் உள்ளாா்.
இந்நிலையில், மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறையினா் 6 போ் இரு குழுக்களாகப் பிரிந்து, வேலுமனோகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் புதன்கிழமை பகல் முதல் இரவு வரை சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின் போது யாரும் வீட்டிலிருந்து வெளியே செல்லவோ, வெளியிலிருந்து வீட்டுக்குள் செல்லவோ அனுமதிக்கவில்லை. சோதனை குறித்துக் கேட்டபோது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது குறித்து உயா் அதிகாரிகள் தெரிவிப்பாா்கள் என்றும் வருமான வரித்துறையினா் தெரிவித்தனா்.