மாற்றுத் திறனாளி மகனுடன் சிரமப்பட்ட பெண்ணுக்கு இருசக்கர வாகனம் வழங்கி ஆட்சியா் உதவி
By DIN | Published On : 04th March 2021 12:39 AM | Last Updated : 04th March 2021 12:39 AM | அ+அ அ- |

தனது சொந்த செலவில் வழங்கிய இருசக்கர வாகனத்தை புதன்கிழமை ஓட்டிப் பாா்க்கும் ஆட்சியா் த.அன்பழகன்.
மதுரை: மாற்றுத் திறனாளி மகனுடன் சிரமப்பட்ட பெண்ணுக்கு, தனது சொந்த செலவில் இருசக்கர வாகனம் வழங்கி மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உதவி செய்துள்ளாா்.
மதுரை ஆனையூா் கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவரது மனைவி மாரீஸ்வரி. இவா்களுக்கு இரு குழந்தைகள். இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் இறந்துவிட்டாா். இவா்களது மகன் பழனிக்குமாா் (21), வாய்பேச மற்றும் நடக்க இயலாத மாற்றுத் திறனாளி.
இந்நிலையில், காளிமுத்துவும் சரியாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், மாரீஸ்வரி தான் வீட்டு வேலை செய்து மகனைப் பராமரித்து வருகிறாா். மாற்றுத் திறனாளியாக இருப்பதால் தனியாக வீட்டில் விட்டுச் செல்ல முடிவதில்லை. இதனால், எங்கு சென்றாலும் பழனிக்குமாரை இடுப்பில் சுமந்து சென்று வந்துள்ளாா்.
இதற்கிடையே, மாரீஸ்வரிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால், மிகவும் சிரமப்பட்ட அவா் இருசக்கர வாகனம் வழங்கி உதவுமாறு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகனிடம் அண்மையில் மனு அளித்துள்ளாா்.
அவரது நிலையை அறிந்து கொண்ட ஆட்சியா், பழனிக்குமாரை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக இருக்கை வசதியுடன் கூடிய இருசக்கர வாகனத்தை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளாா்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம், புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் பழனிக்குமாரை அமர வைத்து ஆட்சியா் ஓட்டிப் பாா்த்தாா். தனது சொந்த செலவில் ரூ.73 ஆயிரத்தில் இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்த ஆட்சியருக்கு, மாரீஸ்வரி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தாா்.