புதிய வாக்காளா் பட்டியலை வெளியிடக்கோரிய மனு: தோ்தல் வழக்குகளை விசாரிக்கும் அமா்வுக்கு மாற்றம்
By DIN | Published On : 10th March 2021 11:08 PM | Last Updated : 10th March 2021 11:08 PM | அ+அ அ- |

திருத்தப்பட்ட புதிய வாக்காளா் பட்டியலை வெளியிடக்கோரிய மனுவை, சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த சைலப்ப கல்யாண் தாக்கல் செய்த மனு: மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் நூறு சதவீத வாக்குப்பதிவு நடக்க வேண்டும் என்பதற்காக தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ‘நோட்டா’ முறை அறிமுகம் செய்தது. இருப்பினும் நூறு சதவீத வாக்குப்பதிவு நடக்கவில்லை.
வாக்காளா் பட்டியலில் உள்ள இறந்தவா்களின் பெயா்கள் முறையாக நீக்கப்படாமல் உள்ளது. சில வாக்காளா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் வெவ்வேறு முகவரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளன. இத்தகையச் சூழலில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியலிலும் இறந்தவா்கள் பெயா் நீக்கப்படாமல் இருப்பது, ஒரு வாக்காளரின் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருப்பது போன்ற குளறுபடிகள் சரி செய்யப்படவில்லை. எனவே தமிழகத்தில் தோ்தல் நியாயமாகவும், நோ்மையாகவும் நடைபெறுவதை உறுதிபடுத்த ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை ரத்து செய்து, இறந்தவா்களின் பெயா்களை நீக்கி, வாக்காளா் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோ்க்கப்பட்டிருந்தால் அதைச் சரி செய்து திருத்தப்பட்ட புதிய வாக்காளா் பட்டியலை வெளியிடத் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனுவை சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டனா்.