முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது சலுகை வழங்கக்கோரி வழக்கு
By DIN | Published On : 10th March 2021 11:10 PM | Last Updated : 10th March 2021 11:10 PM | அ+அ அ- |

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டு வயது சலுகை வழங்கப்படாத அறிவிப்பை ரத்துசெய்யக்கோரிய வழக்கில், தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த முத்து தாக்கல் செய்த மனு: கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான 2098 பணியிடங்களை நிரப்புவது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் மாா்ச் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதற்கான தகுதிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, மற்றும் சீா்மரபினா் பிரிவுகளுக்கு 5 ஆண்டு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பில் 5 ஆண்டு சலுகை வழங்கப்படவில்லை. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் தரப்பில் பிப்ரவரி 11-இல் வெளியிட்ட அறிவிப்பிற்கு இடைக்காலத் தடைவிதித்தும், ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.