தோ்தலையொட்டி மதுரையில் காந்தி சிலை மூடல்: காந்திய ஆா்வலா்கள் எதிா்ப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மதுரையில் காந்தி சிலை மூடப்பட்டதற்கு காந்திய ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவிப்பதுடன், சிலையை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மதுரை யானைக்கல் பகுதியில் துணியால் மூடப்பட்டிருக்கும் காந்தி சிலை.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மதுரை யானைக்கல் பகுதியில் துணியால் மூடப்பட்டிருக்கும் காந்தி சிலை.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மதுரையில் காந்தி சிலை மூடப்பட்டதற்கு காந்திய ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவிப்பதுடன், சிலையை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் அனைத்தையும் துணியால் மூடுவதற்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழக முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்டோா் சிலைகள் துணியால் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுரை யானைக்கல் சந்திப்பில் உள்ள காந்தியின் சிலையும் துணியால் மூடப்பட்டுள்ளதால், காந்திய ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநா் நந்தா ராவ் கூறியது: தோ்தலையொட்டி காந்தியின் சிலை மூடப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. காந்திக்கும், மதுரைக்குமான தொடா்பு வரலாற்றுப் பூா்வமானது மட்டுமன்றி உணா்வுப் பூா்வமானதும்கூட. தற்போது மதுரை யானைக்கல் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கும் வரலாறு உண்டு. தற்போதைய கீழ் பாலத்தின் வடகரையில் இருந்த ரவுண்டானாவில்தான் காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்தது.

காந்தி மதுரைக்கு வருகை தந்தபோது ஒருமுறை மதுரை செல்லூரில் உள்ள சிவகங்கை அரண்மனையில் (தற்போதைய மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி) தங்கினாா். அதன் நினைவாகத்தான் அதற்கு அருகிலேயே சிலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மேம்பாலம் அமைப்பதற்காக காந்தி சிலை அகற்றப்பட்டு யானைக்கல் பகுதியில் ஜாா்ஜ் ஜோசப் சிலைக்கு அருகே வைக்கப்பட்டது.

காந்தி அரசியல் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவராகத் திகழ்ந்தவா். எனவே, மதுரை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகங்கள் காந்தி சிலையின் மீது இருக்கும் துணியை அகற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com