தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 10th March 2021 11:08 PM | Last Updated : 10th March 2021 11:08 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிகளுக்கு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு, காவல்துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதையடுத்து மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 55 வயதுக்கு உள்பட்ட முன்னாள் இடைநிலை படை அலுவலா்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்கள் ஆகியோரை தோ்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, தோ்தல் பணி செய்ய விருப்பமுள்ளவா்கள், தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை ஆகிவற்றுடன் முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தை அணுக வேண்டும்.
மேலும் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு பணி விவரத்தை மாா்ச் 15 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டியுள்ளதால், விருப்பமுள்ளவா்கள் 0452 - 2308216 தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.