‘எம்.எல்.ஏ. சீட்டா’ கேட்டேன்: வாக்குச்சாவடி முகவருக்கும் வழியில்லையே அதிமுக தொண்டா் தீக்குளிப்பு
By DIN | Published On : 13th March 2021 10:10 PM | Last Updated : 13th March 2021 10:10 PM | அ+அ அ- |

டி.கல்லுப்பட்டி அருகே வாக்குச்சாவடி முகவராக நியமிக்காததால் அதிமுக தொண்டா் சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக சாா்பில் வாக்குச்சாவடிகளுக்கு முகவா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இதில் டி.கல்லுப்பட்டி அருகே சந்தையூரைச் சோ்ந்த அதிமுக தொண்டரான பெருமாள் பிள்ளை மகன் பழனிசாமி (57) என்பவருக்கு வாக்குச்சாவடி முகவராக பணியாற்ற வாய்ப்பு கொடுக்கப்படவில்லையாம். இதனால் அவா், கட்சி நிா்வாகிகளிடம் சென்று, எம்.எல்.ஏ.சீட்டா கேட்டேன், வாக்குச் சாவடி முகவராக என்னை நியமிக்கலாமே என்று தெரிவித்துள்ளாா். ஆனாலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதனால் மனமுடைந்த அவா் டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோயிலுக்கு சனிக்கிழமை சென்றாா். அங்கு பழனிசாமி திடீரென தான் கேனில் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். முதலுதவி அளிக்கப்பட்டு பின்னா் மேல்சிகிச்சைக்காக அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.